தாய்த் தெய்வம்.

 கன்னியாகுமரியில் உள்ள குமரித் தெய்வம் தமிழர்களின் கடல்துறைத் தெய்வமாகத் தோன்றியிருக்க வேண்டும். 'கடல்கெழு செல்வி' என்று சங்க இலக்கியம் (அகநா.370) குறிப்பிடும் பழைய தாய்த் தெய்வமும் அதன் சடங்குமுறைகளும் எவ்வாறு மறைந்து போயின என்று தெரியவில்லை. மீனைக் குலக் குழுச் சின்னமாகவும் கொடியாகவும் கொண்ட பாண்டியர் எனும் அரசமரபு தமிழ்நாட்டில் இருந்திருக்கின்றது. அவர்களுடைய தலைநகர்த் தெய்வமும் மீனோடு கூடிய பெயர் பெற்றிருக்கின்றது. சங்க இலக்கியக்


குறிப்பின்படி சுறாக் கொம்பை நட்டு வழிபட்ட 'தென் பரதவர்' என்னும் சாதியும் பிற மீனவச் சாதிகளும் நெடிய கடற்கரையும் இன்றளவும் தமிழ்நாட்டில் உள்ளன. தமிழகம் முழுவதிலும் பரவலாக நாட்டார் தெய்வப் பெயரிடு முறைகளிலும் மீனா, மீனாள், மீனாட்சி ஆகிய பெயர்களின் செல்வாக்கினை நம்மால் மறுதலிக்கவியலாது. தந்தைத் தெய்வம் இல்லாமல் தனித்த தாய்த் தெய்வமாகத் தமிழ்நாட்டு அரசர்கள் குமரித் தெய்வத்தைக் கொண்டாடி இருக்கின்றனர் என்ற செய்தி கல்வெட்டுக்களால் தெரிய வருகின்றது. இக்குமரித் தெய்வமே சங்ககாலத் தமிழர்களின் 'கடல்கெழு செல்வியாக' இருக்க வேண்டும். இந்நினைவுகளில் இருந்தே தமிழ்ப் பௌத்த மரபில் 'மணிமேகலை' எனும் கடல் தெய்வம் தோன்றி இருக்க வேண்டும்.


மதுரை மீனாட்சித் தெய்வம் தானே தனியுரிமையோடு முடிசூடி அரசாளும் தெய்வமாகும். இக்கோயில் திருவிழாவில் திருமணச் சடங்குக்கு முன்னர் அவள் மட்டும் முடிசூடும் 'பட்டாபிஷேகம்' என்னும் திருவிழாச் சடங்கும் 'திக்குவிஜயம்' என்ற பெயரில் அரசி நகரசோதனை செய்யும் திருவிழாச் சடங்கும் நிகழ்த்தப் பெறுகின்றன. 'அவள் அரசியே தவிர அவள் கணவன் அரசன் அல்லன்.' இப்படி ஒரு தனித்தன்மைகொண்ட தெய்வம் இந்தியாவில் வேறெங்கும் இல்லை. சிலப்பதிகாரம் குறிப்பிடும் 'தென்னவன் குலமுதல் கிழத்தி' (பாண்டியரின் குலதெய்வம்) இவளாகவே இருந்திருக்க வேண்டும். இத் தொடர்பையும் தொன்மையினையும் காட்டும் நுட்பமான சான்று ஒன்று அண்மையில் கிடைத்துள்ளது. எருமைத் தலை அரக்கனை அழிப்பதற்காக நவராத்திரித் திருவிழாவில் இவள் தவம் செய்யும்போது எட்டாம் திருநாள் விழாவில் மதுரை மீனாட்சிக்கு வேப்பம்பூ மாலை சூட்டப்படுகின்றது. 'வேப்பம்பூ மாலை சூடுதல்' என்பது தமிழ்நாட்டில் வேறு எங்கும் கண்டும் கேட்டும் அறியாத செய்தியாகும். பாண்டியர்களின் அடையாளப் பூமாலையான வேப்பம்பூமாலையை இத்தெய்வம் சூடிக் கொள்வது இத்தெய்வம் பாண்டியரின் குல தெய்வம் என்ற கருத்தினை உறுதி செய்கின்றது. (பாண்டியர்களின் குடிப்பெயர்களில் ஒன்றாக 'வேம்பன்' என்ற பெயரைச் சிலப்பதிகாரம் குறிப்பிடப்படுவதும் இங்கு கவனிக்கத்தக்கது.

பேரா.தொ.ப

Comments

Popular posts from this blog

ராஜீவ் படுகொலை - புகார்களுக்கு மறுப்பு.

நிறை கவனம் ஓஷோ.