அழகுத் தெய்வம்

 


மங்கியதோர் நிலவினிலே கனவிலிது கண்டேன், வயதுபதி னாறிருக்கும் இளவயது மங்கை; பொங்கிவரும் பெருநிலவு போன்றவொளி முகமும். புன்னகையின் புதுநிலவும் போற்றவருந் தோற்றம், துங்கமணி மின்போலும் வடிவத்தாள் வந்து, தூங்காதே யெழுந்தென்னைப் பாரென்று சொன்னாள். அங்கதனிற் கண்விழித்தேன் அடடாவோ! அடடா! அழகென்னும் தெய்வந்தான் அதுவென்றே அறிந்தேன். 

"யோகந்தான் சிறந்ததுவோ? தவம் பெரிதோ?" என்றேன்; "யோகமே தவம், தவமே யோக" மென உரைத்தாள். "ஏகமோ பொருளன்றி இரண்டாமோ?"என்றேன்; "இரண்டுமாம், ஒன்று மாம், யாவுமாம்"என்றாள். "தாகமறிந் தீயுமருள் வான்மழைக்கே யுண்டோ?" "தாகத்தின் துயர்மழைதான் அறிந்திடுமோ?" என்றேன். "வேகமுடன் அன்பினையே வெளிப்படுத்தா மழைதான் விருப்புடனே பெய்குவது வேறாமோ?" என்றாள். 

"காலத்தின் விதி மதியைக் கடந்திடுமோ"என்றேன். "காலமே மதியினுக்கோர் கருவியாம்" என்றாள். “ஞாலத்தில் விரும்பியது நண்ணுமோ?"என்றேன்; "நாலிலே ஒன்றிரண்டு பலித்திடலாம்” என்றாள் "ஏலத்தில் விடுவதுண்டோ எண்ணத்தை?” என்றேன்; “எண்ணினால் எண்ணியது நண்ணுங்காண்" என்றாள். "மூலத்தைச் சொல்லவோ ? வேண்டாமோ?"என்றேன்; முகத்திலருள் காட்டினாள் மோகமது தீர்ந்தேன்.

-மகாகவி பாரதியார்

Comments

Popular posts from this blog

ராஜீவ் படுகொலை - புகார்களுக்கு மறுப்பு.

நிறை கவனம் ஓஷோ.