திருமுறை கண்ட சோழன்.
ராஜராஜ சோழன் ஒரு நாள் நிசும்ப சூதனி கோயிலுக்குச் செல்கிறார். இன்றும் இந்தக் கோயில் தஞ்சாவூர் கிழக்குக் காவல் நிலையத்திற்கு அருகில் படைவெட்டி மாரியம்மன் கோயில் எனும் பெயரில் உள்ளது. அங்குள்ள துர்க்கை உக்கிர வடிவத்தில் காட்சி அளிக்கிறார். இக்கோயிலானது, விஜயாலய சோழனால் கட்டப்பட்ட சோழர்களின்
பூர்வீகக் கோயில் ஆகும்.
குனித்த புருவமும்,
கொவ்வைச் செவ்வாயிற்
குமிண் சிரிப்பும், பனித்த சடையும், பவளம்போல்
மேனியிற் பால் வெண்ணீறும், இனித்தமுடைய எடுத்த
பொற்பாதமும் காணப்பெற்றால் மனித்தப் பிறவியும் வேண்டுவதே, இந்த மாநிலத்தே!
ஞானியர்கள், பக்திமான்கள், அருளாளர்கள், மனிதப் பிறவியே வேண்டாம். இறை நெறியோடு கலந்துபோக வேண்டுமென்றுதான்
நினைப்பார்கள். ஆனால், ஒரே ஒரு காரணத்திற்காவது மனிதனாக பிறக்க வேண்டும் என்கிறார் திருநாவுக்கரசர்! எதற்காக? தில்லை அம்பலத்தில் ஆடுகிற ஆடல் வல்லாளன் நடராஜனுடைய
பொற்பாதங்களைக் காண்பதற்காகவே மனித பிறவியும் வேண்டுவதே இம்மாநிலத்தே என்று பாடுகிறார்.பாடலைக் கேட்டு மெய்மறந்த ராஜராஜன், இது என்ன பாட்டு? இதை யார் இயற்றியது என்று கேட்கிறார். இந்தப் பாடல் சிவனைப் போற்றிப் பாடுகின்ற தேவாரம். தேவாரத்தை திருஞானசம்பந்தர், அப்பர், சுந்தரர் மூவரும் சேர்ந்து இயற்றி இருக்கிறார்கள் என்று பதில் கூறுகிறார்கள். அருமையான இப்பாடல்களை நமது கோயில்களில் தினமும் பாடச் செய்யலாமே. இப்பாடல்கள்
எங்கிருக்கின்றன என்று கேட்கிறார்.சிதம்பரம் தில்லை ஆடலாசன் கோயிலில், ஒரு பூட்டிய அறையில் இந்தப் பாடல்களை வைத்திருக்கிறார்கள். பார்க்க இயலாது என்பதால் இதனைப் பாட முடியவில்லை என்கிறார்கள். பேரரசர், நம்பியான்டார் நம்பியுடன் தில்லையை நோக்கிப் பயணிக்கிறார்.கோயிலுக்குள் செல்கிறார். ஆடலரசலன் தரிசனம்!
கோயிலில் வேதியர்களிடமும் அந்தணர்களிடமும் திருமுறை சுவடிகளைப் பற்றி கேட்கிறார், விளக்கம் அளிக்கப்படுகிறது. ஆனால் பூட்டிய அறையைத் திறக்க மறுக்கிறார்கள்.
சோழ மன்னன், மும்முடிச்சோழன், ஒப்பாரும் மிக்காருமில்லாத ஆற்றல்மிக்க அரசன், பக்தியின் காரணமாய் பொறுத்துக்கொள்கிறான். அறையினைத் திறப்பதற்கு என்ன செய்ய வேண்டும் என்கிறார். அப்பர், திருஞானசம்பந்தர், சுந்தரர் ஆகிய மூவரும் வந்தால்தான் திறக்க முடியும் என்று கூறுகிறார்கள்.
மூவரும் எப்படி வருவார்கள்? அவர்கள்தான் காலத்தால் மறைந்து போய்விட்டார்களே என்கிறார். மூவரும் வராவிட்டால் திறக்க முடியாது என்று உறுதியாய் மறுத்துவிடுகிறார்கள்.
இந்த அறிவுமிக்க சிங்கம், மூன்று பேரின் உருவத்தையும் பொற்சிலைகளாய் தங்கத்திலேயே செய்து எடுத்து வந்து, அந்த அறைக்கு முன்னால் வைத்து, அறையைத் திறக்கலாமே என்றார். அறையின் கதவு திறக்கப்படுகிறது. உள்ளே போன பிறகுதான் தெரிகிறது . ஓலைச் சுவடிகள் செல்லரித்துக் கிடக்கின்றன. அதைப் பார்த்து ராஜராஜன் கதறுகிறார். நம்பியாண்டார் நம்பியும் அழுகிறார்.அய்யோ! இப்படி ஆகிவிட்டதே என்று!
மீதம் இருப்பதை, சிதையாமல் இருப்பதை உடனே பத்திரப்படுத்துங்கள். இவையனைத்தையும் தொகுத்து எழுதுங்கள் என்று ஆணையிடுகிறார். திருமுறைகள் தொகுக்கப்படுகின்றன.
திருஞான சம்மந்தர் பாடல்களை முதல் மூன்று திருமுறைகளாகவும், திருநாவுக்கரசர் பாடல்களை அடுத்த மூன்று திருமுறைகளாகவும், சுந்தரமூர்த்தி நாயனார் பாடல்களை ஏழாம் திருமுறையாகவும் தொகுத்துள்ளார். நம்பியாண்டார் நம்பி இந்த வேலையைத் திறம்படச் செய்துள்ளார்.
இந்த தேவாரப் பாடல்களைக் கல்வெட்டில் பதிப்பதாலோ, ஓலைச் சுவடியில் பாதுகாப்பதாலோ பயன் இல்லை. இந்த சிவநெறியை சிவனைப் பற்றிய பாடல்களை, மக்களிடம் கொண்டுபோய்ச் சேர்க்க வேண்டும் என்று கூறி பிடாதியார்களை அதாவது ஓதுவார்களை அரசுப் பணியாளர்களாக நியமனம் செய்கிறார்.
ஓதுவார்கள் இப்பாடல்களை, தேவாரப் பாடல்களைத் தலைமுறை தலைமுறையாகக் கோயில்களில் ஓதவேண்டும் என்ற ஆணையிட்டு கல்வெட்டுகளில் பதியவும் செய்கிறார். ஓதுவார்கள் என்று பின்னாளில்தான் இவர்களுக்குப் பெயர் வந்தது. அதற்கு முன்னால் இவர்களுக்கு பிடாதியர் என்று பெயர். முதன் முதலாக 48 பிடாதியர்களை நியமனம் செய்த விவரம் தஞ்சை கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. தலைமுறை தலைமுறையாக உங்களுக்கு பொன், பொருள், நிலம் கொடுக்கிறேன்.
உங்கள் வேலையே இந்தப் பாடல்கள் அனைத்தையும் பாராயணம் செய்து, கோவில் கோவிலாகச் சென்று, ஊர் ஊராகச் சென்று ஓதவேண்டும்! சோழ தேசமெங்கும் சிவாய நம என்ற சிவ நாமம், தேவார தேவ கீத ஒலிகள் ஒலிக்கப்பட வேண்டும் என்கிறார். அடுத்தது உங்கள் தலைமுறையில் யார் யாருக்கெல்லாம் விருப்பம்
இருக்கிறதோ அவர்களெல்லாம் இந்த ஓதுவார் பணியைச் செய்யலாம். ஏனென்றால் அக்காலத்தில், இப்பொழுது இருப்பது போல், கணினி நினைவகத்தில் சேமித்து வைக்கும் வசதி இல்லாத காரணத்தால், மனித மூளைகளையே இப்பாடல்களை சேமித்துவைக்கும் கருவிகளாகப் பயன்படுத்தினார் ராஜராஜ சோழன்.
இப்பாடல்கள் அனைவரையும் சென்று சேரவேண்டும். ஒரு மனிதனோடு, ஓர் இடத்தோடு, ஓர் ஊரோடு, ஒரு மண்டலத்தோடு நின்றுவிடக்கூடாது. புவனமெங்கும் ஒலிக்க வேண்டும் என்று கூறுகிறார். இப்படித்தான் திருமுறைகளை ஓத ஆரம்பித்தார்கள். மாமன்னன் ராஜராஜனின் உயர்ந்த சிந்தனையால்தான், சைவத்தைப் போற்றும் இந்த தெய்வீகப் பாடல்கள் தலைமுறை தலைமுறையாக காப்பற்றப்பட்டு வருகின்றன.
நெஞ்சுருகிப்போன சிவனடியார்கள், தமிழர்கள், சோழ தேசத்து மக்கள், தங்கள் தண்டமிழ் வேந்தன் ராஜராஜனை 'திருமுறை கண்ட சோழன்' என வணங்கிப் போற்றினர்.
உமாபதி சிவாச்சாரியார்,
"உலக மகிழ்வு தரும் சைவம் மீது தோன்றி ஓவாது வரும் பொன்னிசூழ் சோழ நாட்டின் திலகமென விளங்கும் மணிமாட ஆரூர் தியாகேசன் பாதம் பணிந்து செங்கோல் ஓச்சி அலகில் புகழ் பெரு ராசராச மன்னன்" என்று போற்றுகிறார்.
சேக்கிழார் புராணத்தில் சேய திருமுறை கண்ட ராஜராஜன் எனவும் தேவார நாயகன் என்றும் குறிப்பிடப்படுகிறார்.
Comments
Post a Comment