தேன் நிலவு


தேன். மனிதனுக்குக் கிடைத்த முதல் தலைமுறை உணவுகளுள் ஒன்று. முக்கியமானது. அதற்கு நிகரான ருசியை வேறு எதிலும் கண்டிராத மனிதன் ஆதி காலத்தில் தேனைக் கடவுளாகவே நினைத்தான். அது பரிசுத்தமானது என்று நம்பினான். உண்மையானது என்று கருதினான். உண்மையானதும் பரிசுத்தமானதும் இனிப்பானதும் ருசியானதுமான ஒன்று கடவுளாக மட்டுமே அல்லவா இருக்க முடியும்?

பூவிலிருந்து தேனை உறிஞ்சி எடுத்துச் சென்று அடைகளில் சேகரிக்கும்

தேனீக்கள் தான் மனித குலத்தின் முதலாசிரியர்கள். கிடைத்த இடத்தில் உண்பதல்ல. அடுத்த வேளைக்குச் சேகரித்து வை. அது ரொம்ப முக்கியம். வேளாவேளைக்குத் தேடித் தேடி ஓடிக்கொண்டிருக்காதே. உட்கார்ந்து சாப்பிடப் பழகு. நாளைக்கு நீ உட்கார்ந்து சாப்பிட வேண்டுமானால் இன்றைக்கு ஓடித் தேடி உழைத்தால்தான் உண்டு.

சொற்களில்லாமல் இந்தப் பாடங்கள் மனிதனுக்குப் புரிந்ததும் தேன் அவனது

தெய்வங்களுள் ஒன்றாகிப் போனது.

இன்றைக்குப் பிறந்த குழந்தைக்கு முதல் உணவு தாய்ப்பால். ஆதி காலத்தில் ஒரு குழந்தை பிறந்தால் உடனே அதன் உதட்டில் ஒரு சொட்டுத் தேனைத் தான் தடவுவார்கள். குழந்தையின் முதல் அழுகையைச் சிரிப்பாக மாற்றும் கடவுள் அது.
அதே தேனைத்தான் திருமணத்துக்கும் சாட்சியாக வைத்திருந்தார்கள். பண்டைய கிரேக்க, ரோமானிய, ஜெர்மானிய நிலப் பகுதிகளில் இந்தத் தேன் சாட்சிதான் முழுத் திருமணமே. துருக்கி, வடக்கு ஆப்பிரிக்காவின் சில பகுதிகளிலும் இந்த நடைமுறை இருந்திருக்கிறது.

விருந்து, கேளிக்கைகளை அதிகாலை முடித்துவிட்டு சூரியன் உதிக்கும்போது மணப்பெண்ணையும் பையனையும் ஒரு வெட்ட வெளி மைதானத்தில் நிற்க வைத்து இருவர் கைகளிலும் கொஞ்சம் தேனை விடுவார்கள். கையைக் குழிச்சிக்கோ. தேன் கீழ சிந்தக் கூடாது. பெரிசுகள் எச்சரிக்கும்.

குழித்த கையில் தேன் குளம் பொன்னிறத்தில் பொலியும். சுற்றி நிற்கும் சுற்றத்தார் ஆடிப் பாட ஆரம்பிப்பார்கள். ஒரு மணி நேரம், இரண்டு மணி நேரம், சமயத்தில் மூன்று மணி நேரத்துக்கும் மேலாகப் பாடல் நீளும். அமர்க்களமான கச்சேரி. வாத்தியங்கள் ஒலிக்கும். சுழன்று சுழன்று ஆடுவார்கள். ஆண்களும் பெண்களும் குழந்தைகளும் ஆடிப்பாடி அலுத்து முடித்து அவரவர் வீட்டுக்குப் போன பிற்பாடும் மணமக்கள் குழித்த கையுடன் அப்படியே நின்றாக வேண்டும்.

உச்சி வெயில் வந்து போய், மாலை கவிந்து, மெல்லிய தென்றல் கூடி,

இரவானாலும் நின்ற இடத்தை விட்டு நகரப்படாது!

இதற்கிடையே, அவர்களை அங்கே விட்டுப் போன உறவுக்காரர்கள் ராத்திரி சாப்பாட்டையெல்லாம் முடித்துவிட்டு ஒய்யாரமாகத் திரும்பி வருவார்கள். ஒரு பத்து மணி, பதினொரு மணி என்று வையுங்கள். மீண்டும் பாட்டு. கூத்து. கேளிக்கை.

சரியாக நள்ளிரவு பன்னிரண்டு மணி வரைக்கும் ஆடிவிட்டு அவர்களும் போய்விடுவார்கள். நிலவு உச்சிக்கு வரும்வரை மணமக்கள் அப்படியே குழித்த கையுடன் நிற்கவேண்டும். தேன் ஒரு சொட்டுகூடச் சிந்தியிருக்கக் கூடாது. ஒரு கரண்டித் தேனை ஒரு முழுநாளும் இன்னொரு பாதி இரவும் அப்படி சிந்தாமல் கவனமாகக் கையில் தேக்கி வைக்கக்கூடிய திறமைசாலிகள் வாழ்வின் எந்தவித இடர்பாட்டையும் எளிதில் கடப்பார்கள் என்பது நம்பிக்கை.

தவிரவும் தேன் என்பது தெய்வம். உண்மையானது. புனிதமானது. திருமண உறவைப் போலவே. நிலவு உச்சந்தலைக்கு நேரே வருகிற வரை அதை உள்ளங்கையில் தேக்கி வைத்திருப்பவர்கள், சரியாக அந்த சமயம் வந்ததும் ஒருவருக்கொருவர், தத்தம் கைகளில் உள்ள தேனை ஊட்டி விடுவார்கள்.

தேனும் நிலவும் இணையும் நேரம் அவர்களும் இணையலாம்.

Comments

Popular posts from this blog

ராஜீவ் படுகொலை - புகார்களுக்கு மறுப்பு.

நிறை கவனம் ஓஷோ.