புலால் விலக்கும்' பழக்கம் பெண்களிடம் இருக்கிறது. சில ஆண்களிடமும் இருக்கிறது. இது எதன் அடிப்படையில் தோன்றியது? வெள்ளி, செவ்வாய் புலால் விலக்குவது எதனால்.
அமாவாசை, பௌர்ணமி நாட்களில் சமண, பௌத்த துறவிகள் பிச்சைக்கு வருவாங்க. பிச்சையை பெண்கள் இடவேண்டும் என்பதற்காக பிச்சைக்கு ‘மாதுகரம்' என்று பெயர் வைத்தார்கள் வடமொழியிலே. அமாவாசை, பௌர்ணமியன்று கார் உவா, வெள்ளுவா நாள் என்பார்கள். இந்த நாளிலே பௌத்த துறவிகளெல்லாம் சேர்ந்து சங்கக் கூட்டத்தை அந்த வட்டாரத்திலே ஓரிடத்திலே நடத்துவார்கள். பௌத்தர்கள் தினந்தோறும் பிச்சையெடுப்பர். சமணத் துறவிகள் எட்டு நாட்களுக்கொரு முறை, பதினாறு நாட்களுக்கு ஒரு முறை பிச்சை எடுத்துச் சாப்பிடுவார்கள். அவர்கள் பிச்சைக்கு வருகிற நாட்களிலே அவர்களுக்குப் புலால் கொடுக்கக் கூடாது என்கிற அடிப்படையிலேதான். அவர்க வீட்டுப் புலாலை அவர்கள் உண்ணலாம்.
'கொன்றால் பாவம் தின்றால் தீரும்' பௌத்தருடையதுதான். பௌத்தர்கள் நிறைய மீன் உண்பார்கள். இன்றைக்கும் இலங்கையிலே இருக்கிற பௌத்தத் துறவிகள் தினந்தோறும் மீன் உண்பார்கள். கடையிலிருந்து வேலைக்காரர்கள் வாங்கிச் செல்லும்போது செத்த மீனா? என்று பார்த்து வாங்கிப் போவார்கள். உயிரோடு இருக்கிற மீனை வாங்க மாட்டான். ராகுல சாங்கிருத்தியாயன் இதை ஓரிடத்திலே எழுதியிருக்கிறார். அவர்களுக்குப் புலால் கொடுக்கக் கூடாது என்பதற்காகத்தான் இந்த விரதமே. அமாவாசை, பௌர்ணமி விரதமெல்லாம் அவங்ககிட்ட இருந்து வந்ததுதான். சில பகுதிகளிலே நஞ்சை நிலங்கள் அதிகமுள்ள திருநெல்வேலி மாதிரிப் பகுதிகளிலே அமாவாசை, பௌர்ணமி அன்றைக்குப் பழைய சோற்றுப் கையை விட மாட்டார்கள். பிச்சைக்காரன் வந்தாலும் இன்னைக்கு அமாவாசை பழைய சோற்றுப் பானைக்குள் கைய விடமாட்டேன் என்பார்கள். வந்த துறவிகளுக்குப் பழையசோறு போடுவதில்லை.
Comments
Post a Comment