பார்ப்பானுக்கு மூப்பு பறையன்.

பெருந்தெய்வம் அல்லாத சிறுதெய்வக் கோயில்களில் (இவற்றின் தலையாய பண்புகள் ஆகம வழிப் பூசைகள் இன்மையும், இரத்தப் பலி கொடுத்தலும்) சடங்கியலான தொல்லெச்சங்கள் மூலம் இன்று தாழ்த்தப்பட்ட சாதியராகக் கருதப்படுவோரில் சில சாதியார், அக்காலத்தில் கோயில் பூசை செய்பவராக இருந்ததை அறிய முடிகிறது. இந்த உண்மையை முதன் முதலாக 1874இல் டபிள்யூ. ஜே. வால்கௌஸ் என்ற ஆராய்ச்சியாளர் தொட்டுக்காட்டினர். இவர்களுள் குறிப்பிட்டுச் சொல்லத் தகுந்தவர் பறையர்கள் ஆவர். 'சங்க இலக்கியத்தில் பறையர்கள் மதிக்கத்தக்க இடத்தைப் பெற்றவராகத் தெரிகிறது. என்று அனுமந்தன் குறிப்பிடுகிறார். சங்க காலத்தில் மதச் சடங்குகளைச் செய்தவர்களில் பறையர்களும் உண்டு என்று ஜார்ஜ் எல். ஹார்ட் குறிப்பிடுகிறார். 'தூய்மை, தீட்டு இவை பற்றிய கோட்பாடுகள் பிராமணர் வருகையினால்தான் தமிழ்நாட்டில் இடம்பெற்றன' என்கிறார் அவர். இன்றும் தமிழ்நாடு முழுவதும் மாரியம்மன் என்ற தெய்வத்தின் கணவராகப் பறையர்களே கருதப்படுகின்றனர். பல இடங்களில் மாரியம்மன் கோயில் திருவிழா தொடங்கும்போது பறையர்க்குக்காப்பு கட்டும் வழக்கம் நடைமுறையில் இருந்து வருகிறது. திருவாரூர் தியாகராசர் கோயில் திருவிழாவின்போது இறைவனின் திருவீதி உலாவில் முன்னதாக யானை மீது அமர்ந்து ஒரு பறையர் கொடிபிடித்துச் செல்லும் வழக்கம் உண்டு. உள்ளூர்ப் புராண மரபுகளின்படி அக்கோயிலின் பிராமண அர்ச்சகர்கள் நண்பகற்பொழுதில் ஒரு நாழிகை நேரம் (24 நிமிடம்) பறையர்களாக மாறிவிடுவதாக ஒரு செய்தி வழங்கி வருகிறது. நண்பகல் கழிந்தபின் மீண்டும் ஒரு முறை அவர்கள் குளித்துவிட்டுப் பிராமணராவார்கள். இப்பிராமணப் பிரிவினர்க்கு "மத்யானப் பறையர்' என்ற பெயர் வழங்குகிறது. பேரூர்ப் புராணம், “முன்னர்ப் பறையனான . இப்பொழுது பள்ளனும் ஆனாய்” என்று சிவபெருமானைக் 

குறிப்பிடுகிறது. பேரூர்க் கோயிலில் 'நாற்று நடவுத் திருவிழா' என்ற பெயரில் இன்றும் ஒரு திருவிழா நடந்து வருகிறது.

தென் மாவட்டங்களில் சிறுவர்கள் பனம்பழம் உண்ணும்போது வேடிக்கையாகப் பனம்பழத்தின் ஒரு முனையினை 'பார்ப்பான் முனை' என்றும் மற்றொரு முனையைப் 'பறையன் முனை' என்றும் கேலிசெய்து நகையாடும் வழக்கம் உள்ளது. இந்தப் பழம் பற்றிய குறியீடு இரு சாதியாரும் ஒரு தொழிற்களத்தில் இருந்ததைக் குறிப்பதாகும். தவிர 'பார்ப்பானுக்கு மூப்பு பறையன், கேட்பார் இல்லாமல் கீழ்ச்சாதியானான்' என்பதும் மற்ற சாதியினரால் தென்மாவட்டங்களில் பெருக வழங்கும் ஒரு சொல்லடையாகும். 'கேட்பதற்கு ஆளில்லாவிட்டால் நிலை இழப்பு ஏற்படும்' என்ற பொருளில் இது வழங்கி வருகிறது. இவை ஒரு காலத்தில் பறையர் பெற்றிருந்த சமூக உயர்வுக்கான சான்றுகளாகும்.

பிராமணராகிய புரோகிதர்க்கும் பறையராகிய புரோகிதர்க் கும் இடையிலான பெரிய அளவிலான வேறுபாடு (மொழி தவிர) புலால் உண்ணலும், இரத்தப் பலியிடுதலும்தாம். வேத காலத்துப் பிராமணர் வேள்விகளில் ஏராளமான உயிரினங்களைப் பலி கொடுத்துள்ளனர். தமிழ்நாட்டிலும் புலால் உண்ட பிராமணராகச் சங்கப் புலவர் கபிலரை (புறம் 113) நாம் காண்கிறோம்.

கி.மு. 6ஆம் நூற்றாண்டில் எழுந்த சமண மதத்தின் செல்வாக்கே பிராமணர்களைப் புலால் உண்ணுவதிலிருந்து தடுத்து நிறுத்தியது. இன்றும் புலால் உண்ணும் பழம் மரபின் தொல்லெச்சமாக ஆந்திரத்தில் (கர்நூல் மாவட்டம் கம்மம் தாலுகாவில்) 'மாதங்கி' வழிபாட்டில் ஈடுபட்டுள்ள பிராமணர்கள் தங்கள் இல்லத்தில் எருமைக் கறி சமைத்து மாதிகருக்குப் பரிமாறுவதும், அதே நேரத்தில் மாதிகர் ஆட்டுக்கறியைப் பரிமாறுவதும் பிராமணர் உண்பதும் ஆண்டுக்கொரு முறை சடங்கு நிகழ்ச்சியாக நடத்தப்படுகிறது. (மாதிகர் ஆந்திரத்தில் ஒடுக்கப்பட்ட சாதியார் ஆவர்.)

மேற்குறித்த தொல்லெச்சங்கள் யாவும் பிராமணர் வருகைக்கு முன்னர் புரோகிதராகப் பறையர்கள் இருந்த வரலாற்று உண்மையினைக் காட்டுகின்றன. கோயில்கள் கற்கோயில்களாகவும், பெருந்தெய்வக் கோயில்களாகவும் அரச ஆதரவோடு ஆக்கப்பட்ட காலங்களில், அங்கு பூசனை செய்வோராக - குடியேற்றவாசிகளான பிராமணர்கள் அமர்த்தப்படுகின்றனர். பிராமணர் வருகைக்கு முன்னர் குருமாராக இருந்தவர்களிடமிருந்து வேறுபடுத்திக் காட்ட பிராமணர் இளைய குருமாராக (புரோகிதராக) இளமைப் பொருள் தரும் பார்ப்பு எனும் சொல்லின் அடியாக, பார்ப்பார், பார்ப்பனர் என வழங்கப்பட்டனர்.

பறையர் தவிர, நாவிதர், வண்ணார் ஆகிய சாதியாரும் அங்கங்கே பிராமணர் வருகைக்கு முன்னர் தமிழ்ச் சாதியார் சிலருக்குக் குருமாராக இருந்துள்ளனர். இதைக் காட்டும் தொல்லெச்சங்களும் ஏராளமாக உள்ளன. இவை தனி விரிந்த ஆராய்ச்சிக்கு உரிய களங்களாகும்.
பேரா.தொ.ப

Comments

Popular posts from this blog

ராஜீவ் படுகொலை - புகார்களுக்கு மறுப்பு.

நிறை கவனம் ஓஷோ.