விஜயநகர வாரிசுகள்.

கி.பி. 1310 முதல் 1323 வரை தமிழ்நாடு இசுலாமியர் படையெடுப்பால் அலைக்கழிந்தது. மீண்டும் 1383இல் விசய நகரப் பேரரசின் தளபதிகளின் படையெடுப்பால் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. விசய நகரப் பேரரசு இசுலாமியருக்கு எதிராக வைதிக நெறியை உயர்ந்த இலட்சியமாகக்கொண்டு தோன்றிய அரசமரபாகும். ஆட்சியதிகாரம் விசயநகரப் பேரரசின் தளபதிகளின் கைக்கு மாறியவுடன் தமிழ் நாடு ஒரு பண்பாட்டு நெருக்கடியை எதிர்கொண்டது. அதாவது

வரலாற்றில் முதல்முறையாகத் தமிழ்நாட்டின் அரசியல் அதிகாரம் பிறமொழி பேசும் ஆட்சியாளர்களிடம் நிலையாக மாறியது. இந்த ஆட்சியாளரைத் தொடர்ந்து தெலுங்கு மொழி பேசும் மக்கள் பெருமளவு குடியேறத் தொடங்கினர். பிராமணர் தொடங்கிச் சக்கிலியர் ஈறாக இந்தக் குடியேற்றம் அமைந்தது. பிராமணர், பிராமணரை அடுத்த 'மேல் சாதியினரான' புலால் உண்ணாத ரெட்டியார், ராஜுக்கள் இவர்களுக்கு அடுத்த படிநிலைகளில் அமைந்த நாயுடு (வெலமா, கம்மவார், கவர, காப்பு, பலிஜா), இவர்களுக்கும் அடுத்த நிலையில் உள்ள ஆசாரிகள், பெரும்பாலும் புன்செய் நிலத்து விவசாயிகளான நாயக்கர், மிகத்தாழ்நிலையில் உள்ள செருப்புத் தைக்கும் சக்கிலியர், தோட்டி வேலை செய்யும் சக்கிலியர் என இவர்களை வகைப்படுத்திக் காணலாம். இவர்களோடு சௌராட்டிரப் பகுதியிலிருந்து ஏற்கனவே வெளியேறி ஆந்திரத்தில் இருந்த நெசவுத் தொழில் செய்யும் சாதியான சௌராட்டிரர்களும் தமிழகத்தில் வந்து குடியேறினர். இக்கால கட்டத்தில் தமிழ்நாட்டில் தனித்து வளர்ந்திருந்த சைவ, வைணவ மதங்கள் பின்னுக்குத் தள்ளப்பட்டன. வைதிக நெறியே முன்னிறுத்தப்பட்டது. 'இந்து மதம்' அதிகாரத்தில் அமர்ந்தது. தமிழ் அக்காலத்தில் ஆட்சி மொழியாக இல்லை. ஆட்சியாளர்களின் மொழியாகிய தெலுங்கு பேணப்பட்டது. அரசியல் அதிகாரத்தில், வைதிக நெறியின் காவலர்களான பிராமணர்க்கும் சமசுகிருதத்திற்கும் முன்னுரிமை தரப்பட்டது.

இவர்கள் ஆட்சி முடியும் தறுவாயில் கி. பி. 1700க்குப் பிறகு உருது பேசும் வடநாட்டு முசுலிம்கள் அங்கங்கே சில பகுதிகளில் ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றினர். மிகச்சில பகுதிகளில் பிரஞ்சுக்காரரும் ஏனைய பகுதிகளில் பிரிட்டிஷ்காரர்களும் ஆட்சியைக் கைப்பற்றினர்.

கி.பி. 14ஆம் நூற்றாண்டின் தொடக்கம் முதலாகத் தமிழ்நாட்டின் அரசியல் அதிகாரத்தைக் கையிலே வைத்திருந்த அனைத்து ஆட்சியாளர்களும், தமிழர்களின் சராசரி நிறத்திலிருந்து வேறுபட்ட சிவந்த நிறமுடையவர்கள் அவர்களால் ஆதரிக்கப்பட்ட வடநாட்டில் இருந்து வந்த இசுலாமிய ஞானிகள், ஐரோப்பியப் பாதிரிமார்கள், பிராமணர்கள் ஆகிய அனைவரும் தமிழர்களைவிடச் சிவந்த நிறம் உடையவர்கள். எனவே ஐந்து அரசியல் அதிகாரமும், நூற்றாண்டுக்கு மேலாகத் தமிழ்நாட்டில் அரசியல் சித்தாந்தங்களையும் நடைமுறைகளையும் உயர்த்திப பிடிக்கின்ற ஆன்மீக அதிகாரமும் சிவந்த நிறமுடையவர்களின் கையிலேயே இருந்தது. எனவே இந்த நிறம் அதிகாரத்தின் நிறமாக, உயர்ந்த ஆன்மீகத்தின் நிறமாக, மேட்டிமையின் சின்னமாக, அழகு நிறைந்ததாகக் காட்டப்பட்டது.

சுருக்கமாகச் சொல்வதானால், தமிழ் பேசும் பெருவாரியான மக்கள் கூட்டத்தாரின் மரபுவழி அழகுணர்ச்சி மனிதத் தோலின் நிறத்தைப் பொறுத்தமட்டில் திசைமாற்றம் பெற்றது. எதிர்நிலையில் சொல்வதானால், கறுப்பு நிறமுடைய மக்கள் அழகற்றவர்களாகவும், ஆளப்படுபவர்களாகவும், அதிகாரத் திற்குத் தகுதியற்றவர்களாகவும், இழிவின் சின்னமாகவும் கருதப்பட்டனர். இன்றளவும் இதுவே தொடர் கதையாகி வருகிறது. எனவேதான் தளைகளிலிருந்து தங்களை விலக்கிக் காட்ட விரும்பும் தனி மனிதர்கள், அதாவது தனிவாழ்வின் பொருளாதார மேன்மையிலும் அதிகாரத்தின்மீதும் வேட்கை உடையவர்கள் சிவப்புத் தோலை வெறியுடன் விரும்புகிறார்கள். எனவே 'கறுப்பு-சிவப்பு' என்பது வெறும் அழகுணர்ச்சி சார்ந்த பிரச்சனையன்று. அது மரபுவழி அழகுணர்ச்சியிலிருந்து திசை மாற்றப்பட்டவர்களின் அதிகார வேட்கைக்கும் மரபுவழிச் சங்கிலியால் பிணைக்கப்பட்ட எளிய மக்களுக்கும் இடையிலே நிலவிவரும் ஒரு முரண்பாடு ஆகும்.



Comments

Popular posts from this blog

ராஜீவ் படுகொலை - புகார்களுக்கு மறுப்பு.

நிறை கவனம் ஓஷோ.