பண்டாரம்.
பண்டாரம், பரதேசி ஆகிய இரண்டு சொற்களும் ஒரே பொருளில் இக்காலத்தில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இப்பொழுதைய நடைமுறையில் இச்சொற்கள் உணவிற்குக் கூட வழியில்லாத ஏழைகளையே குறிக்கும்.
பண்டாரம் என்ற சொல்லுக்கு முதற்பொருள் 'பொன், வெள்ளி, முத்து போன்ற உயர் மதிப்பு உடைய பொருள்களைச் சேர்த்து வைக்கும் கருவூலம்' என்பதாகும். கி. பி. 13ஆம் நூற்றாண்டு வரை அரசுப் பண்டாரங்களைப் போலவே கோயில்களிலும் பண்டாரங்கள் இருந்தன. இப்பண்டாரங்களில் உயர் மதிப்புடைய தங்கம், வெள்ளியாலான சிலைகளும் நகைகளும் பாதுகாக்கப்பட்டன. கோயிலில் சமய நூல்களைச் சேர்த்துப் பேணி வைக்கும் இடம் 'சரஸ்வதி பண்டாரம்' என்றழைக்கப்பட்டதனைச் சுந்தர பாண்டியன் கல்வெட்டு மூலம் அறிகிறோம். இப்பண்டாரங்களின் வாசலில் நின்று காவல்பணி செய்து வந்தவர்களே இக்காலத்தில் 'பண்டாரம்' என்னும் சைவ மதம் சார்ந்த சாதியாராவர்.
இக்காலத்துக் காவலாளிகளைப் போல இவர்கள் நின்று கொண்டே காவல்பணி செய்யவில்லை. பண்டாரத்தின் வாசலில் அமர்ந்து கோயிலுக்குப் பூத்தொடுக்கும் வேலையில் இவர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். இவர்கள் பூத்தொடுப்பதற்காகத் தரப்பட்ட நீண்ட கற்பலகைகளை இன்றும்கூடப் பெரிய கோயில் களில் காணலாம். இவற்றுள் சிலவற்றில் கல்வெட்டுக்களும் உள்ளன. பூச்செடிகளையும் மரங்களையும் உடைய கோயில் நந்தவனங்களைப் பேணும் பொறுப்பும் பண்டாரக் காவலர் களிடமே விடப்பட்டன. இன்றைக்குக் கோயில் பண்டாரக் காவலர்களாக இவர்கள் இல்லை. ஆனால் பூத்தொடுக்கும் வேலை மட்டும் இந்தச் சாதியாரோடு பிணைக்கப்பட்டுள்ளது. கோயிலுக்குள் நின்று கொண்டு காவல் காப்பதற்குப் பதிலாக இவர்களைக் கற்பலகைகளின் முன் அமரவைத்துப் பூத்தொடுக்கும் வேலையினையும் கொடுத்ததனை அழகுணர்ச்சி நிறைந்த வேலைப் பங்கீடு எனச் சொல்லலாம். (கல்வெட்டுக்களோடு கூடிய பூப்பலகைகள் தமிழகக் கோயில்களில் நிறையவே கண்டு பிடிக்கப்பட்டுள்ளன.)
இக்காலத்தில் தமிழ்பேசும் பண்டாரங்களோடு கன்னட மொழி பேசும் பண்டாரங்களும் தமிழ்நாட்டில் வாழ்கின்றனர். விசயநகரப் பேரரசின் காலத்தில் இவர்கள் தமிழகம் வந்துள்ளனர். இவர்கள் பெரும்பாலும் வீர சைவப் பிரிவினர். எனவே தங்கள் சாதிக்கு ‘யோகீஸ்வரர்' எனப் பெயரிட்டுக் கொள்கின்றனர்
வைணவக் கோயில்களில் பண்டாரத்தின் காவலர்கள் பூத்தொடுக்கும் வேலையோடு மடைப்பள்ளியிலும் (கோயில் சமையலறையிலும்) பணிபுரிந்தனர். எனவே வைணவக் கோயில்களில் இக்காலத்தில் 'பண்டாரி' என்ற சொல் சமையல்காரர்களைக் குறிக்கிறது. வீட்டு விழாக்களில் சமையல் செய்பவர்களைத் தென் மாவட்ட முசுலிம்கள் சிலர் இன்றும் 'பண்டாரி' என்றே அழைக்கின்றனர்.
பண்டாரம் என்பது செல்வக் குவியலைக் குறிக்கும் சொல் என்பதனால் அருட்செல்வத்தை அள்ளி வழங்கும் இறைவனை ‘மூலபண்டாரம் வழங்குகிறான் வந்து முந்துமினே’ என்று மாணிக்க வாசகர் பாடுகிறார்.
தொ.ப
Comments
Post a Comment