பருத்திப் பெண்டும் பள்ளர் நெசவும் பாய் நெசவும்.


கிறித்துவுக்கு முற்பட்ட காலத்தில் தமிழ்நாட்டில் பருத்தித் துணி நெசவு செய்த மக்கட் பிரிவினர் யார் என்பதை அறிய இயலவில்லை. ஆயினும் சங்க இலக்கியங்களில் நூற்றல் தொழில் பற்றிச் சில குறிப்புக்கள் காணக்கிடக்கின்றன. பருத்திப் பெண்டு.

என்னும் தொடர் இரண்டு இடங்களில் வருகிறது. பருத்திப் பெண்டின் பனுவல் அன்ன (பறம்:125)

பருத்திப் பெண்டின் சிறுதீ விளக்கத்து (புறம் : 326)

என வரும் அடிகளால் பெண்கள் இரவிலும் சிறிய விளக் கொளியில் நூல் நூற்ற செய்தியினை அறிகிறோம். நூல் என்ற சொல்லுக்குப் பதிலாகப் பனுவல் என்ற


சொல்லும் காணப்படுகிறது. பார்ப்பனர் மார்பில் அணிந்த முப்புரி நூல் முந்நூல் எனப்பட்டது. நூல் என்ற சொல்லுக்கு இலக்கணம் (சாத்திரம்) என்றும் பொருள்.


சங்க இலக்கியக் குறிப்புக்கள் நூற்றல் தொழிலைப் பெண்களோடு சேர்த்தே பேசுகின்றன. உரையாசிரியர் குறிப்புக் களிலிருந்து கைம் பெண்களே சங்க காலத்தில் நூற்கும் தொழிலில் ஈடுபட்டிருந்தனர் என்று தெரிகிறது. இந்தச் செய்தி நமக்கு அதிர்ச்சியாக அமைகிறது. நூற்கும் தொழில் தனக்குரிய சமூக மரியாதையினை அக்காலத்தில் பெற்றிருக்கவில்லைபோலும் எனவேதான் அது கைம்பெண்களுக்குரிய தொழிலாகக் கருதப்பட்டிருக்கிறது.


பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னர் கோவை மாவட்டத் தில் இருந்து கிடைத்த கள ஆய்வுச் செய்தியும் இதை உறுதிப்படுத்துவது வியப்புக்குரியதாகும். ஒரு பெண் கைம்பெண் ஆனால் அவளுக்குப் பிறந்த வீட்டில் இருந்து கோடிச் சேலை (சில சாதியாரிடத்து வெள்ளைச் சேலை) கொண்டுவந்து கொடுப்பது வழக்கம். பிற மாவட்டங்களில் பெரும்பாலும் பிறந்த வீட்டிலிருந்து அப்பெண்ணின் உடன்பிறந்தவர் இதனைக் கொண்டுவந்து அவள் கையில் கொடுப்பது அல்லது அவள் மேல் எறிந்துவிடுவது வழக்கம் கோவை மாவட்டத்தில் இந்தச் சடங்கு


சிறிய வேறுபாட்டுடன் அமைகிறது. கைம் பெண் ஆனவனின் உடன்பிறந்தவன், அவள் கையில் நூல் நூற்கும் கதிர் (தக்களி) ஒன்றையும் சிறிது பஞ்சையும் கொடுத்துவிட்டு, 'கொல்லன் கொடுத்த கதிர் இருக்கு, கொறநாட்டுப் பஞ்சு இருக்கு; நூறு வயசுக்கும் நூற்றுப் பிழைச்சுக்க' என்றும் சொல்ல வேண்டும். சங்க காலத்தில் உருவான பண்பாட்டு அசைவு ஒன்று அண்மைக் காலம்வரை உயிரோடு இருந்தது வியப்புக்குரிய

செய்திதான். சங்க இலக்கியம் இதுபோல விரிந்த கள ஆய்வுகள்

பலவற்றுக்கு இடந் தருகிறது.

பருத்தி நெசவு போலவே பாய் நெசவும் தொன்றுதொட்டு நடைபெற்றுவரும் தொழிலாகும். நெல்லை மாவட்டத்துப் பத்தமடையில் நெய்யப்படும் பாய்கள் இன்றளவும் உலகப் புகழ்பெற்று விளங்குகின்றன. பாய் நெசவுக்குரிய மூலப் பொருள் கோரை அல்லது பஞ்சாங் கோரை. எனப்படும். சங்க இலக்கியத்தில் மருதத் திணைப் பாடல்களில் இது 'சாய்' எனக் குறிக்கப் பெறும், நீரோடைகளின் கரைகளை ஒட்டி அமைந்த பள்ளங்களில் கோரைப் புல், புதராகச் செழித்து நிற்கும். எனவே பாய் நெசவும் பெரும்பாலும் மருத நிலத்திற்கு உரியதாகும்.

கோரைகளைப் பிடுங்கிவந்து, காயவைத்துச் சாயம் ஏற்றி மீண்டும் தண்ணீரில் ஊறவைத்து, அதன் பின்னரே தறிகளில் நெய்வர்.

இன்று தமிழ்நாட்டில் பாய் நெசவு முழுக்க முழுக்க முசுலிம்கள் செய்யும் தொழிலாகவே உள்ளது. அப்படியென்றால் இசுலாமிய சமயம் தமிழ்நாட்டில் பரவுவதற்கு முன்னர் இத்தொழிலைச் செய்துவந்த சாதியார் யார் என்ற கேள்வி எழுகிறது. கோரைப்பள்ளர் என்ற ஒரு சாதியினர் இருந்திருக் கின்றனர். இவர்களே மருத நிலத்து ஓடைக்கரையில் வளரும் கோரைப் புற்களைக் கொண்டு பாய் நெசவுத்தொழில் செய்து வந்தனர். இச்சாதியினர் பின்னர் நூற்றுக்கு நூறு இசுலாமிய மதத்திற்கு மாறிவிட்டனர். இன்றளவும் கோரைப் பள்ளம் (பாளையங்கோட்டை), கோரம்பள்ளம் (தூத்துக்குடி), கோரிப் பாளையம் (மதுரை) என்ற பெயரில் வழங்கும் ஊர்கள் அனைத்தும் பாய் நெசவுக்குரிய கோரைகள் வளர்ந்த ஓடைக்கரைகளாகவே இருப்பதைக் காணலாம். பத்தமடையில் நடைபெறும் பாய் நெசவும் அருகிலுள்ள தாமிரவருணி ஆற்றங்கரையில் விளையும் கோரம் புல்லைக் கொண்டே நடைபெறுகிறது.

பேரா.தொ.ப

Comments

Popular posts from this blog

ராஜீவ் படுகொலை - புகார்களுக்கு மறுப்பு.

நிறை கவனம் ஓஷோ.