பயணம் என்கிற சொல் ஆங்கிலத்தில் 'டிராவல்' என்று அழைக்கப்படுவதை அனைவரும் அறிவோம். ஆனால், அதற்குப் பின் ஒரு சுவாரசியமான தகவல் உண்டு. இலத்தீன் அதன் வேர்ச்சொல். சித்திரவதை செய்வதற்குப் பயன்படுத்தப்படும் பற்சக்கரத்தை அது குறிக்கும். மத்திய காலத்தில் ஐரோப்பாவில் பயணம் செய்வதிலிருக்கும் சிரமங்களைக் குறிப்பதற்காக அவ்வாறு குறியீடாக அது பயன்படுத்தப்பட்டது. 'டூர்' என்கிற சொல் பிரெஞ்ச்சிலிருந்து வந்தது. அதற்குத் திருப்பம், சுற்று என்ற பொருள்களெல்லாம் உண்டு. 'வெகேஷன்' என்கிற ஆங்கிலச் சொல் இலத்தீனிலிருந்து வந்தது. அதற்குச் சுதந்திரம் என்று பொருள். 'லக்கேஜ்' என்கிற சொல்லை முதலில் பயன்படுத்தியவர் ஷேக்ஸ்பியர்தான்.